சென்னை:

நாடு முழுவதும் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையிலும் அதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விட்டில், சிறுமி ஒருவர், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு சில பெண்கள் உதவியுடன் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு  பகுதியை சேர்ந்த சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறி புரசைவாக்கம் பகுதிக்கு வந்துள்ளார். அவரை சந்தித்து பேசிய, புரசை வாக்கத்தை சேர்ந்த நிஷா என்பவர், அவருக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அறையில் அடைத்து வைத்துள்ளார். பின்னர்  அவரது நண்பர்கள் 5 பேர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த சிறுமி, அங்கிருந்து தப்பிச் சென்று, தனது வீட்டுக்கு சென்று  பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, அவரது பெற்றோர்கள் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமியை வீட்டில் அடைத்து வைத்த நிஷா உள்பட அவரது கூட்டாளிகள் சபீனா, முபினா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த  5 வாலிபர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கொடுத்துள்ள அடையாளத்தின் பேரில், 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஒரு சிறுமியை பலர் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது புரசைவாக்கத்தில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.