சென்னை: நெல்லையில் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இன்று காலை காயமடைந்த அந்த பெண் சப்இன்ஸ்பெக்டரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த நிலையில், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் மார்க்ரெட் தெரசா, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆறுமுகம் என்ற நபர், உதவி ஆய்வாளரைக் கத்தியால் வெட்டியதையடுத்து, அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தாக்கிய ஆறுமுகம் என்ற நபர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவத்தில் காயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் மார்க்ரெட் தெரசாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
அதோடு மட்டுமல்லாமல், மார்க்ரெட் தெரசாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.