a

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த பாபநாசத்தில் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலியானவை அல்ல; அவை மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்று தஞ்சை  மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் வாகன சோதனையை  தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். .
சேலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த வாகனத்தை தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை இட்டனர்.   வாகனத்தில் ஏராளமான போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு, பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இது தொடர்பாக ஓட்டுநர் முருகேசன்,45 , க்ளீனர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யபப்ட்டனர்.  வாகனமும்  பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சுப்பையன், வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க அட்டையால் தயாரிக்கப்பட்ட மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களே அவை. சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து திருவாரூருக்குக் கொண்டு சென்ற போது, அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருப்பதாகவும், தஞ்சை ஆட்சியர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் அந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிமுக தேர்தல் சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.