டெல்லி:  உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக, இங்கிலாந்தில் இருந்து  தாயகம் வந்துள்ள விமான பயணிகளை கண்டுபிடித்து, சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 22ந்தேதி டெல்லி வந்த விமான பயணிகளில் 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இங்கிலாந்தில் புதியவகையிலான கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தொற்றானது சாதாரண வைரசை விட 70% வேகமாக பரவி வருவதாக கூறப்படு கிறது. இதையடுத்து உலக நாடுகள், இங்கிலாந்துக்கு விமானம் மற்றும் கப்பல் சேவைகளை நிறுத்தி இருப்பதுடன், தங்களது நாடுகளிலும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளன.  இந்தியாவும் இங்கிலாந்துக்கு விமான சேவைகளை தடை செய்துள்ளது. பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்குள்  இந்தியா வந்த பயணிகளை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டிசம்பர் 22ந்தேதி அன்று இங்கிலாந்திலிருந்து ஏர்இந்தியா விமானத்தில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 500 பயணிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 5 பயணிகளுக்கு கொரோனா பாசிடிவ் என்பது தெரிய வந்துள்ளது.  இவர்களில் 3 பேர் டெல்லி விமான நிலைய சோதனையில்  கண்டுபிடிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 2 பேர் பஞ்சாப் மாநிலம்  லூதியானா,  பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இன்னொருவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.  இவர்களுக்கு அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகி உள்ளது.

தற்போது அவர் லூதியான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  அவரது மனைவி மற்றும்மகனும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக  லூதியானா கூடுதல் துணை ஆணையர் சந்தீப் குமார் கூறியுள்ளார்.