ஸ்ரீகண்டபுரம், கேரளா
கேரளாவை சேர்ந்த புது மண தம்பதிகளை குறித்து வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களை பரப்பியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 4 ஆம் தேதி கேரளாவில் கண்ணனூர் அருகில் உள்ள ஸ்ரீகண்டபுரம் என்னும் ஊரை சேர்ந்த ஜூபி ஜோசப் மற்றும் அனூப் செபாஸ்டியன் ஆகியோருக்கு திருமணம் நடந்தது. இந்த புகைப்படம் வாட்ஸ்அப்பில் வெளியாகியது. ஆனால் அதனுடன் வந்த செய்தி அனைவரையும் அதிர வைத்தது.
அதில் அந்தப் பெண்ணுக்கு 48 வயது எனவும் மணமகனுக்கு 25 வயது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.. அத்துடன் அந்தப் பெண்ணுக்கு ரூ.25 கோடி சொத்து உள்ளதாகவும் மணமகனுக்கு வரதட்சணையாக 101 சவரன் மற்றும் ரு.50 லட்சம் ரொக்கம் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி பலராலும் பரப்பப்பட்டு வைரலானது.
ஆனால் உண்மையில் ஜூபியின் வயது 27 மற்றும் அனூப் வயது 29 ஆகும். இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து மணமக்களுக்கு பல அனாமதேய அழைப்புக்கள் வந்த வண்ணம் இருந்தன. அது மட்டுமின்றி இந்த செய்தியை பகிர்ந்த பலரும் ஜூபியின் உடல் வாகைக் குறித்து ஆட்சேபமான பின்னூட்டங்கள் இட்டுள்ளனர்.
இதை ஒட்டி காவல்துறையிடம் ஜூபி, அனூப் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். காவல்துறயினர் இது குறித்து விசாரித்து ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் வின்செண்ட் முத்தாதில், பிரேமானந்தன், ராஜேஷ், சைஜு மற்றும் சுரேந்திரன் ஆகியோர் ஆவார்கள்.
இவர்கள் அனைவரும் தற்போது பணி ஏதும் புரியவில்லை எனவும் ஒரு நகைச்சுவைக்காக இவ்வாறு செய்தி பரப்பியதாக கூறி உள்ளனர். இந்த செய்தியை இவர்களிடம் இருந்து பரப்பியவர்கள் யார் என காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனூப்பின் தந்தை கைது செய்யப்பட்டவர்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர்கள் யாரென்பதே தங்களுக்கு தெரியாது எனவும் கூறி உள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது 4 சட்டங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளன.
இந்த குற்றம் நீதிமன்றத்தில் உறுதிப் படுத்தப்பட்டால் அவர்களுக்கு ரொக்க அபராதம் அல்லது ஒரு வருட சிறை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.