இராமநாதபுரம்: தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதன் காரணமாக மீன் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மாநிலம் முழுவதும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படும். அதன்படி நடப்பாண்டு மீன்பிடி தடை காலம் நேற்று (ஜூன் 14) உடன் முடிவடைந்தது. இதையடுத்து, ராமேஸ்வரம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
முன்னதாக நேற்று காலை முதலே தங்களது விசை படகுகளில், பிடித்து வரும் மீன்களை பதப்படுத்துவதற்காக ஐஸ்பெட்டிகளில் ஐஸ் கட்டிகள் நிரப்புவது, படகுகளை இயக்குவதற்கு தேவைப்படும் டீசல் பெட்ரோல் பங்கில் நிரப்புவது மற்றும் மீன்பிடிக்க தேவைப்படும் உபகரணங்களை படகுகளில் அடுக்குவது உணவுகள் தயார் செய்வதற்கான பொருட்களை படகுகளில் சேகரிப்பது உள்ளிட்ட பணிகளில் நேற்றே ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர்.
மீன்பிடிப்பதற்காக ராமேஷ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுள்ளனர். இருந்தாலும், முதல் நாளில், சுமார் 2500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். மீன்பிடி தடைக் காலத்திற்கு பிறகு மீன்பிடிக்கச் செல்வதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் கடலுக்குள் சென்றுள்ளனர்.
இதேபோல் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பைபர் மற்றும் விசைப்படகுகளில் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீனவர்கள் வங்க கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்வதால் வஞ்சிரம் கொடுவா ஷீலா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என நம்புகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்களின் கலை கடுமையாக உயர்ந்திருந்த நிலையில், தற்போது தடை காலம் முடிவடைந்து உள்ளதால், மீன் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.