ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மீனவப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, அந்த பகுதி பொதுமக்கள், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி 5மணி நேரமாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதையடுத்து, அங்கு அதிரடிப்படை குவிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதைபோல தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மீனவ பெண்ணான சந்திரா என்பவர் நேற்று வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்றுள்ளார். ஆனால் இரவுவரை வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். அவர் குறித்து தகவல் கிடைக்காத நிலையில், அவரது கணவர் பாலு ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து காவல்துறையினரும் சந்திராவை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், வடகாடு பகுதியில் உள்ள முள்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரை நிர்வாணமாக ஒரு பெண் பிணமாக கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்திருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அது மீனவப்பெண் சந்திரா என்பதை உறுதி செய்தனர்.
முள்புதருக்குள் கிடந்த சந்திராவின் உடலில், பல காயங்களும், கழுத்தில் துணியால் இறுக்கியதற்கான தடயங்கள் இருந்ததாக கூறப்படுகிறத. மர்ம நபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொன்று விட்டு உடலை தீ வைத்து எரித்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் இறால் பண்ணையில் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு பணியில் இருந்த வடமாநில வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து, இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். மேலும் இறால் பண்ணையில் பணிபுரிந்த 6 வடமாநில வாலிபர்களையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி, அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து சந்திராவின் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால், அங்கு திரண்டிருந்த ஊர் மக்கள் சந்திராவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சந்திராவின் உடலை எடுக்க அனுமதித்தனர். சந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 3 வடமாநில வாலிபர்கள் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை தீவைத்து எரித்தது தெரியவந்தது. கஞ்சா போதையில் அவர்கள் இந்த கொடூர செயலை செய்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் தாக்குதலால், வடமாநில வாலிபர்கள் 6 பேரும் கடுமையாக காயமடைந்துள்ளதால், அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால், அவர்களிடம் போலீசார் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை.
இந்த நிலையில் சந்திரா படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈட வழங்க வேண்டும், வடமாநில வாலிபர்கள் வேலை பார்த்த இறால் பண்ணையை மூட வேண்டும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தால் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து ராமேசுவரம் துணை தாசில்தார் அப்துல் ஜப்பார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பவ இடத்திற்கு கலெக்டர் வரவேண்டும் மற்றும் தங்களின் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றுவதாக அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ராமேசுவரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு மாவட்ட எஸ்.பி. தலைமையில் அதிரடிப்படையினர் போராட்ட களத்தில் குவிப்பு அவர்கள் உதவியுடன் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதிரடிப்படை காவல்துறையினர் மீனவர்களின் போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.