ரியாத்

வுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் மட்டும் கலந்துக் கொண்ட மராத்தான் ஓட்டப்பந்தயம் நிகழ்ந்துள்ளது.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வருகின்றன.   இங்கு தற்போதுதான் பெண்கள் வாகனங்கள் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   கடந்த செப்டம்பர்மாதம் ரியாத் நகரில் நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டி மைதானத்தில் நடைபெற்ற சவுதி அரேபியா தேசியதிருநாள் நிகழ்வைக்  காண அனுமதி வழங்கப்பட்டது.

அதையொட்டி சமீபத்தில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட 3.5 கிமீ தூரத்துக்கான மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.   இதில் கலந்துக் கொள்வதாக பெயர் கொடுத்த 2000 பெண்களில் சுமார் 1500 பெண்கள் கலந்துக் கொண்டனர்.

இதில் சவுதியை சேர்ந்த 28 வயது பெண் பொறியாளரான மிஸ்னா அல் நசார் என்பவர் 15 நிமிடங்களில் 3.5 கிமீ தூரத்தை கடந்து வெற்றி பெற்றார்.    அமெரிக்கா மற்றும் தைவான் நாட்டை சேர்ந்த பெண்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.

வெற்றி பெற்ற மிஸ்னா, “நான் இந்தப் போட்டியில்  கலந்து வெற்றி பெற்றதை பெருமையாக கருதுகிறேன்.   டோக்யாவில் வரும் 2020 ஆம் வருடம் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் எனது நாட்டின் சார்பாக கலந்துக் கொள்ள ஆர்வமாக் உள்ளேன்.

நான் இந்த போட்டியில் வெற்றி பெற எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பே காரணம் ஆகும்.   நான் கடந்த 2014ஆம் வருடம் முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.   என்னைப் போன்ற பெண் விளையாட்டாளர்களை தற்போது ஊக்குவிக்க தொடங்கி உள்ள அரசுக்கு நன்றி”  எனத் தெரிவித்துள்ளார்.