சென்னை: அரசு மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக்-கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முதன்முறையாக எந்தவித சிபாரிசும் இன்றி கவுனிசிலிங் மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நடவடிக்கையை அமைச்சர் உதயநிதி மேற்கொண்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக்கில் சுமார் 25துஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு பல ஆண்டுகளாக இடமாறுதல் வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அவர்கள் இடமாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு சுழற்சி முறையில் இடமாறுதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இது டாஸ்மாக் ஊழியர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதையடுத்து அவ்வப்போது, சிபாரிகள் மூலம் பலர் இடமாறுதல் பெற்று வந்தனர். இதனால் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கூறிய இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், டாஸ்மாக் பணியாளர்களிடம், மேல் அதிகாரிகள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை நிர்பந்தப்படுத்தி பெற்று வருகின்றனர். இதற்கு இடமாறுதல் கொள்கையை வைத்துக்கொண்டு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தினமும் அச்சுறுத்தி வருகின்றனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று, ஆளுங்கட்சி தொழிற்சங்கங்கள், ஒவ்வொரு கடையிலும் மாதந்தோறும், 20 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்க நிர்ப்பந்தப்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், டாஸ்மாக் வரலாற்றில் முதன்முறையாக, பணியாளர்களுக்கு எந்தவித சிபாரிசும் இன்றி கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 2444 பணியாளர்கள், கவுன்சிலிங் அடிப்படையில் இடமாற்றுதல் பெற்றுள்ளதாகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் இந்த கவுன்சிலிங் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றதாக இடமாறுதல் பெற்ற டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வன், டாஸ்மாக் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பணியிட மாறுதல் கொள்கை உருவாக்க வலியுறுத்தி வந்தோம்.
ஆனால், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியிட மாறுதல் கொள்கை இல்லாத நிலை காணப்பட்டது. கொடுக்க வேண்டியதை கொடுத்தால் பணியிட மாறுதல் என்ற நிலை இருந்தது. ஆனால் அவை தற்போது தடுக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் முத்துசாமியின் சீர்திருத்த முயற்சியை பாராட்டுகிறோம். 500 கடைகள் மூடப்பட்டதில், அங்கு பணியாற்றியவர்ளுக்கு பணி மாறுதல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றது. பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பது குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.