மும்பை

ந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கான கருத்தடை ஊசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசின் நிதியுதவியுடன் பெண்களுக்கான கருத்தடை ஊசி மகாராஷ்டிராவில் நேற்று, உலக மக்கட்தொகை தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இது பெண்களுக்கான மாத்திரைகள், கருத்தடை கருவிகள் பொருத்துதல் போன்ற தற்காலிக முறைகளுக்கு மாற்றாக வழங்கப்படும். இந்த ஊசி 18-45 வயதுள்ள பெண்களுக்கு மிகவும் எளிதான கருத்தடை முறை என சொல்லப்படுகிறது.   இந்த ஊசி போட்ட மூன்று மாதங்களுக்கு கருத்தரிக்க வாய்ப்பே இல்லை.   மீண்டும் கருத்தரிக்க ஆசைப்படுபவர்கள், ஊசி போடுவதை நிறுத்திக் கொண்ட ஏழு மாதங்களில் கருத்தரிக்க முடியும்.   கருத்தடைக்கான மற்ற மருந்துகளைப் போல் இம்முறையிலும், ஆரம்பத்தில் அதிகமான ரத்தப்போக்கு, அதிகமான உடல் வலி போன்ற உபாதைகள் இருக்கலாம்.

இது பற்றி மகாராஷ்டிரா குடும்பக்கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் அர்ச்சனா பாடில், ”இந்த முறை இந்தியாவுக்கு புதியது,  ஆனால் ஏற்கனவே உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப் பட்டு வெற்றி கண்டுள்ளது.   இரு குழந்தைகள் இடையில் இடைவெளி இருக்க இந்த முறைகள் அவசியம் தேவை.  இதனால் பிரசவ கால மரணங்கள், மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக் குறைவால் மரணங்கள் ஆகியவற்றை வெகுவாக குறைக்க முடியும்.  இந்த திட்டம் மகாராஷ்டிராவின் 10 மாவட்டங்களில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.  விரைவில் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்.” என கூறினார்.

மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் தீபக் சாவந்த், “பெண்களுக்கான எளிய கருத்தடை முறை இது.  ஆனால் உண்மையில் ஆண்கள் கருத்தடை அறுவை செய்துக் கொண்டால் இது போன்ற ஊசிகளுக்கு தேவை இருக்காது.  ஆண்கள் அறுவை சிகிச்சை செய்துக் கொள்வது தங்களின் ஆண்மைக்கு இழுக்கு என அர்த்தமற்று நினைக்கின்றனர்.  சுகாதார ஆர்வலர்கள் அதை போக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.