முதல் சூப்பர் ஸ்டார்…வித்தியாசமான வாழ்க்கை..
– ஏழுமலை வெங்கடேசன்
.படிப்பில் ஆர்வம் காட்டாத சிறு பிள்ளைக்கு கண்டிப்பாக வேறொரு விஷயத்தில் அசாத்திய திறமையும் ஆர்வமும் இருக்கும்.. அப்படிப்பட்ட பிள்ளைகளில் ஒருவர்தான் தியாகராஜன்..
இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த அச்சிறுவனுக்கு இசைமீதும் பாடுவதிலுமே எண்ணம் மேலோங்கியிருந்தது..
படிக்காத பிள்ளையை எந்த பெற்றோர் நேசிப்பார்கள்? இங்கும் அதே வரலாறுதான்.
படிக்க மறுத்து வீட்டைவிட்டே ஒடிப்போனான் பிள்ளை.. பாடிப்பாடி எங்கெங்கோ பிழைப்பு. கடைசியில் ஒரு நாள் தந்தையின் கண்ணில் சிக்க, மறுபடியும் வீட்டு வாசம், ஆனால், வீட்டை விட்டு ஓடிப் போய் விடுவானோ என்ற பயத்தில் இம்முறை உன் இஷ்டம் என்று விட்டுவிட்டார்கள் பெற்றோர்.
தியாகராஜனின் பாடும் குரல்வளம் நாடகங்களில் வாய்ப்புகளை அள்ளியது.
அந்த வாய்ப்பு, சினிமா டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் பார்வையில் பட, பவளக்கொடியில் கதாநாயகன் என்ற அறிமுகத்தை கிடைக்கச் செய்துவிட்டது.
பவளக்கொடி படம் 1934ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. நவீன சாரங்கதாரா, சத்யசீலன் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் அவைகளும் வெற்றிமாலை சூடின.
நான்காவது படம்தான் சிந்தாமணி.. ராயல் டாக்கிஸார் தயாரித்த அந்த படத்தை இயக்கியவர் ஒய்.வி.ராவ், (நடிகை குமாரி ருக்மணியின் கணவர், நடிகை லட்சுமியின் தந்தை)
சிந்தாமணி படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் தாறுமாறாய் ஓடியது. தமிழ் திரை உலகில் ஒரு வருடத்திற்கு மேலே ஒடிய முதல் படம் என்ற கிரீடத்தையும் சூட்டிக்கொண்டது..
படம் அள்ளித்தந்த வசூலை வைத்து மதுரையில் சிந்தாமணி என்ற பெயரில் ஒரு தியேட்டரே கட்டப்பட்டது.
தியாகராஜன் என்ற ஹீரா பாடல்களுக்காக கொண்டாடப்பட்டார். எம்.கே. தியாகராஜ பாகவதர் என்றாகி எம்கேடி என்றெழுத்து தாரக மந்திரமும் ரசிகர்கள் மத்தியில் உண்டானது.
ஆம். இப்படித்தான் தமிழ் சினிமா உலகில் முதல் சூப்பர் ஸ்டார் உருவெடுத்தார்.
அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார் சிவகவி என மேலும் நான்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள். ஒரு பக்கம் பணம் கொட்டோ கொட்டோவென கொட்டியது.
இன்னொரு பக்கம் எங்கு சென்றாலும் ரசிகர்களின் இன்பத்தொல்லை. பாகவதரின் தோற்றத்துக்கும் குரல் வளத்துக்கும் அடிமையாகிப்போன ரசிகைகள் இன்னும் அதிகம்.
1944ல் தமிழ் சினிமா உலகின் முதல் கனவுக்கன்னியான டிஆர் ராஜகுமாரியுடன் ஹரிதாஸ் படத்தில் இணைகிறார் பாகவதர்.
மன்மத லீலையை வென்றவர் உண்டோ..
இந்தப் பாடல் 79 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் உலுக்கி எடுக்கிறது. அப்படியானால்1944-ல் ஹரிதாஸ் படத்தின் இந்தப்பாடல் தியேட்டர்களில் ஓடும்போது ரசிகர்கள் ஆரவாரம் எப்படி இருந்திருக்கும்?
ஹரிதாஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட் 110 வாரங்கள் அதாவது மூன்று தீபாவளியை காண்கிறது..
ஹரிதாஸ் ஹிமாலய வெற்றியை காணப் போகிறது என்று தெரிந்ததுமே பத்துக்கும் மேற்பட்ட படங்கள் பாகவதவருக்கு புக் ஆகின்றன.
ஆனால் எம் கே டியின் எதிர்காலமோ வேறு விதமாக கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு விளையாடுகிறது..
நடிகர் நடிகைகளை பற்றி ஆபாசமாக எழுதி மிரட்டி பிளாக்மெயில் செய்து பணம் கேட்கிறார் என்ற சர்ச்சையான மனிதராக அப்போது திகழ்ந்தவர், பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன.
இவர் ஒரு நாள் படுகொலை செய்யப்பட அந்தப் பரபரப்பான கொலை வழக்கில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனோடு பாகவதரும் கைது செய்யப்படுகிறார்.
பாடல் உலகின் சூப்பர் ஸ்டார் எம் கே டி என்றால் காமெடி உலகின் சூப்பர் ஸ்டார் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்.
இருவரையுமே நம்பி ஏராளமான திரைப்பட முதலீடு செய்திருந்தனர் அடுத்தடுத்த படங்களுக்காக காத்தும் கிடந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான் திரையுலக ஜாம்பவான்கள் இந்த இரண்டு பேருமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.
வழக்கு நடக்கிறது, நடக்கிறது நடந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் வழக்குக்களுக்காக எம் கே டி மற்றும் கலைவாணரின் சொத்துக்களும் சொத்துகளும் கரைகின்றன..
அப்போது பிரிட்டிஷார் ஆட்சி என்பதால் லண்டன் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி மூன்றாண்டுகள் கழித்து 1947ல் விடுதலையாகி வெளியே வருகிறார் பாகவதர்.
ஆனால் அவர் வெளிவரும் காலத்திற்குள் திரையுலகமே மாறிப்போயிருக்கிறது.
தமிழ் திரை உலகில் பாகவதருக்கு சமமாக கருதப்பட்ட சகலகலா வல்லவன் பி.யூ. சின்னப்பா இன்னும் மேலே உயர்ந்து கொடிகட்டி பறந்தார்.
பாகவதரை பொருத்தவரை அவர் பாடல்கள் மூலம் தான் ரசிகர்களை கவர்ந்திருந்தார். அவர் சிறைக்குள் சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி அந்த இடத்தை டி.ஆர். மகாலிங்கம் பிடித்து விட்டார்.
இப்படிப்பட்ட சூழலில் தான் சிறையில் இருந்து வெளியே வந்த பாகவதரை முன்பு போல் உச்சத்தில் வைத்துக் கொண்டாட தமிழ் திரை உலகம் மறுத்துவிட்டது.
வேறு வழியில்லாமல் பாகதவரே ராஜமுக்தி என்ற பெயரில் சொந்தமாக படம் எடுக்கிறார்.
முன்னணி நடிகையாக இருந்த வி.என்.ஜானகி மற்றும் ஓரளவு பிரபலமாக இருந்த பானுமதி என இரு கதாநாயகிகள்..
ஏற்கனவே அசோக்குமார் படத்தில் பாகவதருடன் நடித்த எம்ஜிஆரும் ராஜமுக்தியில் நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ராஜமுக்தி படு பிளாப்.
ஒன்பதே படங்களில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் உச்சத்துக்கு போன பாகவதருக்கு, முக்கியமான கட்டத்தில் வெளிவந்த பத்தாவது படம் அவுட்..
இதன்பிறகு என்னென்னவோ முயன்று பார்த்தும் எம்கே தியாராஜ பாகவதாரல் நிமிரவே முடியவில்லை.
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சொந்தக்குரலில் பாடமுடிந்தவர்கள் மட்டுமே ஹீராவாக நடிக்கமுடியும் என்ற நிலைமாறி டப்பிங் வசதி வந்துவிட்டது.
நரசிம்ம பாரதி, கே ஆர் ராமசாமி, எம்ஜிஆர் போன்றோர் தலைதூக்கி விட்டனர். பராசக்தி படம் வெளியாகி நடிகர் திலகம் சிவாஜி வந்துவிட்ட பிறகு தமிழ் திரையுலகில் நடிப்பின் போக்கே வேறு தளத்திற்கு பாய ஆரம்பித்தது.
8 ஆண்டுகளில் அமரகவி, சியாமளா புது வாழ்வு என மூன்று படங்களில் மட்டுமே எம் கே தியாகராஜ பாகவதரால் நடிக்க முடிந்தது.
கொடுமை என்னவென்றால் அத்தனை படங்களும் பெரும் தோல்வியைத்தான் சந்தித்தன.
இதற்குள் எம்ஜிஆரும் சிவாஜியும் தான் தமிழ் திரை உலகின் போக்கை நிர்மாணிக்கும் இரு பெரும் சக்திகளாக வலுப்பெற்று விட்டனர்.
படங்கள் தொடர்ந்து ஓடாத நிலையில் பாகவதரின் மனநிலை கடும் பாதிப்புக்குள்ளானது. அதன் விளைவாக உடல் ஆரோக்கியமும் அவரை விட்டு ஓடிப் போனது.
மேலும் மூன்று படங்கள் ஓடாத நிலையில் பாகவதர் இறந்தபிறகு அவரின் 14 வது மற்றும் கடைசி படமான சிவகாமி 1960ல் வெளியானது.
பாகவதர் நடித்த சில காட்சிகளை வைத்து தெலுங்கு நடிகர் ஜக்கையாவை வைத்து ஒப்பேற்றி எடுத்து கந்தல் கோலத்தில் வெளியிட்டார்கள்..
பாகவதரின் சிவகாமி படத்தில் அவர் பாடிய பாடல்களை விட ஜக்கையாவுக்காக டிஎம்எஸ் பாடிய ”வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்” என்ற பாடல் செம ஹிட்..
இன்றளவும் சிவகாமி படத்தை இணையத்தளங்களில் ஓட்டிக்கொண்டிருப்பது ஜக்கையா பாடியபடி வர, நடிகை ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீ ஆடியபடி வரும் அந்த பாடல்காட்சிகள்தான்.
எம்கேடியின் வாழ்க்கை அலாதியானது. கதாநாயகனாக மட்டும் இசைக்கச்சேரிகளிலும் பெரும் ஆர்வம் காட்டினார்.
மிகப்பெரிய செல்வந்தர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் அவரின் கச்சேரி மிகபெரிய அடையாளமாக கௌரவமாக கருதப்பட்டது. பாகவதர் கேட்ட பணத்தை கொட்டிக்கொடுத்தார்கள்..
செல்வம் புரண்டது. சென்னையில் மூன்று பிரமாண்டமான பங்களாக்கள், திருச்சியில் ஒரு பங்களா என கட்டினார்.
சகோதரிகளையெல்லாம் மிகுந்த செலவில் திருமணம் செய்துவைத்தார். வெள்ளி அண்டாவில்தான் குளிப்பார். தங்கத்தட்டில்தான் சாப்பிடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது பாகவதரின் வாழ்க்கை.
பணத்திலேயே புரண்டாலும் எம்கேடி பாகவதர் கல்வி நிறுவனங்களில் வளர்ச்சிக்கோ, கோவில்களுக்கோ கச்சேரி செய்தபோது பத்து பைசாகூட வாங்காமல் இலவசமாகவே செய்துகொடுத்தார் என்பார்கள்.
அப்படிப்பட்ட தமிழின் சூப்பர் ஸ்டார் எம்கே. தியாகராஜபாகவதர், வறுமைக்கு ஆளாகி கடைசில் சென்னை அரசு மருத்துவமனையில் காலமாகும்போது வயது வெறும் 49 தான்..
பாகவதர் 1947ல் சிறையிலிருந்து வெளியே வந்தபோது திராவிட இயக்கத்தை சேர்ந்த பிரபலங்கள் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்க துவங்கியிருந்தார்கள். எம்ஜிஆர் முதன் முதலாய் கதாநாயகனாகி கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருந்தநேரம் அது..
திராவிட இயக்கத்தை சேர்ந்த கலைவாணர் என்எஸ்கே போன்றோர், பாகவதரை தங்கள் பாதைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் மிகுந்த தெய்வபக்தி கொண்ட பாகவதர், நாத்திக கருத்துக்களோடு ஒப்புக்கொண்டுபோக மறுத்துவிட்டார்.
ஒருவேளை பாகவதர், திராவிட இயக்க பக்கம் போய் நடிப்பில் வேறு அவதாரம் எடுத்திருந்தால் வரலாறு வித்தியாசாகமாக போயிருக்கலாம்..
எம்கேடி இறந்து இன்றோடு 64 ஆண்டுகள் ஆகின்றன.. அவர் பாடிய,
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்ரமணிய சுவாமி உனை மறந்தார்
அந்தோ அற்பப் பணப் பேய் பிடித்தே
அறிவிழந்து அற்பர்களைப் புகழ்வார்..
போன்ற பாடல்கள் இன்னமும் தமிழர்களின் காதுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.