லிங்கமபள்ளி, தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 1200 வெளி மாநில தொழிலளர்களுடன் சிறப்பு ரயில் கிளம்பி உள்ளது.
மத்திய அரசு கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பணி இன்றி உணவு இன்றி சிக்கி உள்ளனர். இவர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
அந்தந்த சொந்த மாநில அரசுகள் இவ்வாறு சிக்கித் தவிக்கும் மக்களை இரு மாநில ஒப்புதலோடு அழைத்து வரும் நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என மத்திய அரசு கூறியது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் பல மாநில அரசுகள் தங்கள் மாநில தொழிலாளர்களை அழைத்து வர இடை நில்லா சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.
அந்த கோரிக்கையை ஏற்ற இந்திய ரயில்வே தனது முதல் சிறப்பு ரயிலை இன்று தெலுங்கானாவின் லிங்கம் பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹாதியா வுக்கு தொடங்கி வைத்தது. இன்று காலை 4 . 50 மணிக்குக் கிளம்பிய இந்த இடை நில்லா ரயிலில் 24 பெட்டிகளில் 1200 வெளி மாநில தொழிலாளர்கள் தெலுங்கானாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.