ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 82 தொகுதிகளில் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 41 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற நிலையில், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. கடந்த 2015ம் ஆண்டு பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பாஜகவில் தங்களை இணைத்துக்கொள்ள, தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக பாஜக ஆட்சியை தொடர்ந்தது.
வரும் டிசம்பர் 27ம் தேதியோடு சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், தற்போது 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தனித்து 80 தொகுதிகளிலும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்த கூட்டணியாகவும் களமிறங்குகின்றன. காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 7 தொகுதிகளிலும் களமிறங்குகின்றன.
இம்மாநிலத்திற்கான முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இத்தேர்தல் மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளில் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலில் 18,01,356 பெண்கள் உட்பட 37,83,055 பேர் வாக்களிக்க உள்ளனர். பொதுமக்கள் வாக்களிக்க 13 தொகுதிகளில் 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடைபெறும் 13 தொகுதிகளில் 12 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, 1 தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. அதேநேரம், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 4 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இன்று பதிவாகும் வாக்குகள், 5 கட்ட தேர்தல் முடிவுக்கு பின்னர் டிசம்பர் 23ம் தேதி எண்ணப்படும். நக்சல் ஆதிக்கம் கொண்ட மாநிலம் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.