புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகையையொட்டி, 2025ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில்  இன்று  காலை தொடங்கியது.  சீறி வரும் காளைகளை அடக்க  இளைஞர்கள் பட்டாளமும் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

நடப்பு ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில்  இன்று காலை தொடங்கியது. பொதுவாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி,   ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 -ஆம் தேதி வரை 120 -க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள், 30 -க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டுப் போட்டிகள், 50 -க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி,  இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது. போட்டியில், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.  300 மாடுபிடி வீரர்களும் களத்தில் உள்ளனர்.

இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை  அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.   முதலில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்ட பிறகு போட்டி தொடங்கியது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் வீதம் மாடுபிடி வீரர்கள் களமிறங்கி வருகின்றனர்.

இன்று காலை 8 மணிக்கு மேல் தொடங்கிய போட்டி, மாலை 4 மணிவரை நடைபெறும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசும், ஜல்லிக்கட்டு போட்டி நிர்வாகமும் முன்னெடுத்துள்ளது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில், காளையினால் காயம் ஏதும் ஏற்பட நேர்ந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க, மருத்துவ குழுவினரும், மீட்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.