துபாய்:

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை கடந்த மார்ச் மாதத்தில் ஒரு முடிவு எடுத்தது. அதில் இந்தியாவுடன் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் உடனடி விசா வழங்கும் முறை கொண்டு வர முடிவு செய்தது.

 

இதன் அடிப்படையில் இந்தியாவின் சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள நபர் 6 மாதம் செல்லத்தக்க வகையில் அமெரிக்காவின் விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருந்தால் 14 நாட்களுக்கு உடனடி விசா வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த விசாவை மேலும் 14 நாட்களுக்கு ஒரு முறை நீட்டிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரசு எமிரேட்ஸ் விமானநிலையங்களில் தரையிறங்கியவுடன் இந்த விசா வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் முதல் பயணியாக துபாய் சர்வதேச விமானநிலையம் சென்ற இந்தியர் கவுரவிக்கப்பட்டார். இது குறித்த புகைப்படங்களை துபாயின் வெளியுறவு விவகார துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 2வது பெரிய நட்புறவு நாடாக இந்தியா உள்ளது. ஆண்டிற்கு இரு நாடுகளுக்கு இடையே 60 பில்லியன் டாலர் வர்த்தகம் நடக்கிறது. இந்தியாவுக்கு 27 பில்லியன் டாலர் மதிப்பு ஏற்றுமதியை ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மேற்கொள்கிறது. அதேபோல் இந்தியா 33 பில்லியன் டாலர் மதிப்பு ஏற்றுமதியை மேற்கொள்கிறது.

இரு நாடுகளுக்கு இடையே தினமும் 143 விமான சேவைகள் உள்ளது. ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு விமானம் அல்லது வாரத்திற்கு ஆயிரம் விமானங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். 2016ம் ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகள் 1.6 மில்லியன் பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளனர். அதேபோல் அங்கிருந்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அதே ஆண்டில் இந்தியா வந்துள்ளனர்.