சென்னை: அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்குள் உள்ள நிலையில், 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் கேரளாவில் தினசரி 30ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிவிட்டனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 31.14 லட்சம் (31,14,696) தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இன்று காலை 7 மணி வரையிலான தரவுகளின்படி இதுவரை 63.43 கோடி (63,43,81,358) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அக்டோபர் மாதத்திற்குள் நாடு முழுவதும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தகுதியுடைய 94 கோடி பெரியவர்களில் 49 கோடி பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டதாகவும், மத்திய பிரதேசம், கேரளா போன்ற பல மாநிலங்களில் முதல் டோஸ் செலுத்தும் பணி அடுத்த மாதம் இறுதிக்குள் முடிவடைய உள்ளதால் நாடு முழுவதும் முதல் டோஸ் செலுத்தும் பணி அக்டோபர் மாதத்தில் நிறைவடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது டோஸ் செலுத்தும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் எனவும் தமிழகத்தை பொறுத்த வரை முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைய அக்டோபர் இறுதி வரை ஆக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.