திருப்பதி:
திருப்பதி கோயிலில் முதல் கொரோனா பலி ஏற்பட்டுள்ளது. முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனாவுக்கு பலியானதால், கோவில் மூடப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதே வேளையில் தளர்வுகளுடன் ஊரடங்கில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளால், பல இடங்களில் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.
அதன்படி, உலக பிரசித்த பெற்ற ஏழுமலையான் கோயிலும் திறக்கப்பட்டு, கடந்த ஜூன் 8ஆம் தேதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. முதல் 2 நாட்கள் உள்ளூர் மக்கள், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப் பட்டது. இதன் பின்னர், ஜூன் 10ஆம் தேதியில் இருந்து பொது தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோயில்களில் சமூக இடைவெளி, தெர்மல் டெஸ்ட் உள்பட பல்வேறு சோதனைகள் நடைபெற்றபிறகே, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இருந்தாலும், கோவில் ஊழியர்களிடையே கொரோனா தொற்று பரவி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 170க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதால், கோவிலை மீண்டும் அடைக்க ஊழியர்கள் சங்கம் சார்பில் தேவஸ்தானத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க தேவஸ்தானம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில், திருப்பதி கோயிலில் இருந்து முதல் கோவிட் -19 மரணம் பதிவாகியுள்ளது. முன்னாள் தலைமைஅர்ச்சகர் சீனிவாச மூர்த்தி (75) கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால், திருப்பதி தேவஸ்தான ஊழியர்களிடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோயிலை மூடி பக்தர்கள் அனுமதிப்பதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.