துபாய்:
நேற்று துபாயில் விமானம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை காப்பாற்ற உதவியர்களில் ஒருவரான தீயணைப்பு வீரர் ஜாசிம் அல் பலூஷி என்பவர் வீரர் வீரமரணம் அடைந்தார்.

திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டு மதியம் 12.50 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 2.20 மணி) துபாயை வந்தடையும்.
நேற்று காலை வழக்கம் போல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் 777 ரக விமானம் 282 பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 10.19 மணிக்கு புறப்பட்டது. பயணிகள் தவிர விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் 18 பேரும் ஆக மொத்தம் 300 பேர் விமானத்தில் பயணித்தனர். சுமார் 4 மணி நேர பயணத்தில் அமீரக நேரப்படி மதியம் 12.50 மணிக்கு விமானம் துபாயில் தரை இறங்க திட்டமிடப்பட்டு இருந்தது.
அமீரகத்தின் எல்லைப்பகுதியை விமானம் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் முன்சக்கரம் திறக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை தரையிறக்க திட்டமிட்டனர்.
இதையடுத்து துபாய் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு அவரச தகவல் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. துபாயில் இருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் மற்றும் ஓடு பாதைக்கு தீயணைப்பு மற்றும் ஆம்புலன்சுகள் விரைந்தன.

இதற்கிடையே விமானத்தை விமானிகள் சாதுர்யமாக இயக்கி, விமான நிலையத்தை நெருங்கி வந்த நிலையில், பலத்த சத்தத்துடன் விமானத்தின் முன் பகுதி தரையில் மோதி வெடித்தது. இதனால் விமானம் வேகமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது அந்த சமயத்தில் கண்களை மறைக்கும் கரும்புகை வெளியேறியது.
ஆனாலும் தீயணைப்பு வீரர்கள், மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட 300 பேரையும் அவசரகால வழிகள் மூலமாக பத்திரமாக வெளியேற்றினர். பயணிகளில் பெரும்பாலோர் கேரள மாநிலத்தவர்.

பயணித்த அனைவரும் உயிர் பிழைத்தது அனைவருக்கும் நிம்மதியை அளித்தது. ஆனால் இப்பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் ஒருவரான தார் ஜாசிம் அல் பலூஷி என்பவர் வீரமரணம் அடைந்தார்.
பயணிகளை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வீரமரணம் அடைந்த அவருக்கு துபாய் ஏர்போர்ட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Patrikai.com official YouTube Channel