நேபாளப் பிரதமராக பிரசண்டா தேர்வு: இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு

Must read

காத்மாண்டு:
நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு வருகை தரும்படி பிரசண்டாவுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
முன்னாள் மாவோயியத் தலைவர் புஷ்ப கமல் தஹால் என்ற பிரசண்டாவை நேபாள நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
நேபாள பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். அவர்  மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதை அடுத்து  கடந்த மாதம் 24-ம் தேதி பதவி திடீரென விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என அதிபர் பித்யா தேவி பண்டாரி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் பதவிக்கான வேட்புமனுவை பாராளுமன்ற செயலகத்தில் நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்-சென்டர்) கட்சியின் தலைவர் பிரசண்டா கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
இதையடுத்து பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற சிறப்புக் கூட்டம்  நேற்று  நடைபெற்றது. மொத்தமுள்ள 573 உறுப்பினர்களில் 363 பேர் பிரசண்டாவுக்கு  ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசண்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1
நேபாள பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசண்டாவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் “  நேபாளத்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசண்டாவுடன் தொலைபேசியில் பேசி வாழ்த்துக்களை தெரிவித்தேன். நேபாளத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு இந்தியா முழு ஒத்துழப்பு அளிக்கும் என்று அவரிடம் உறுதி அளித்தேன். இந்தியாவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பும் விடுத்தேன்”   என்று  மோடி தெரிவித்தார்.
நேபாளா அரசுக்கு எதிராக பத்தாண்டுகள் நீடித்த  மாவோயிச போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் பிரச்சண்டா. இந்த போராட்டம் 2006ல் அமைதி ஒப்பந்தத்தில் முடிந்தது.   எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரசண்டா  பிரதமராக பதவி வகித்தார்.
 

More articles

Latest article