சென்னை,
காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி, போலீஸ் தாக்கியதாக கூறி தீக்குளித்த கார் ஓட்டுநர் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த இரண்ட நாட்களுக்கு முன்பு சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், மணிகண்டன் சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் தரக்குறைவாக பேசியதுடன் இரும்புக் கம்பியால் மணிகண்டனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மணிகண்டன், போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார்.
உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடலில் 59% தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையறிந்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. அதைத்தொடர்ந்து மணிகண்டனை தாக்கிய போலீசாரை இடைநீக்கம் செய்து மாநகர ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கார் ஓட்டுநர் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.