காஞ்சிபுரம்
தனியார் மருத்துவக் கல்லூரியிடம் தடையில்லா சான்றிதழ் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அதிகாரி ரூ. 3 லட்சம் லஞ்சம், கேட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஸ்ரீபெரும்புதூர் தாலுகா தண்டலம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த மருத்துவக் கல்லூரியின் மாடிக் கட்டிடங்களுக்குத் தீயணைப்புத் துறையினரால் வழங்கக்கூடிய உயர்வகை கட்டிட தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
அதையொட்டி வேலூர் மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குநர் சரவணகுமார், காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் ஆகியோர் மருத்துவக் கல்லூரியின் கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர், தடையில்லா சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டுமானால், வேலூர் மண்டல துணை இயக்குனர் சரவணகுமாருக்கு பணம் தர வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார், மருத்துவக் கல்லூரி பிரதிநிதியிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
அவர் முதல் தவணையாக ரூ.1.5 லட்சம் கொடுங்கள், மீதமுள்ள பணத்தை வேலை முடிந்ததும் தரும்படி கேட்டுள்ளார். இந்த நிகழ்வு வீடியோ காட்சி ஆக்கப்பட்டு தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.