சென்னை: ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல மாலான எக்ஸ்பிரஸ் மாலில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயைணப்பு துறை, காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 90 ஆயிரம் சதுர அடி உடன் சென்னையின் மிகப்பெரிய வளாகமாக காணப்படுகிறது. இங்கு ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு இங்குள்ள உணவகத்தில் தீபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மாலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுதீ அணைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மீண்டும், ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மின்சார கம்பிகளில் தீப்பற்றியதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. மால் முழுவதும் சூழ்ந்துள்ள புகை மூட்டத்தை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். மாலில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மாலில் உள்ள 4 வழிகள் மூலமாகவும் புகையை வெளியேற்றப்படும் பணி நிறைவடைய 4 மணி நேரம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.