சென்னை: சென்ட்ரல் அருகே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகே இருந்த வார்டுகளில் இருந்த நோயாளிகள் பதற்றத்துடன் அலடியடித்து வெளியேறினர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அதிகாலை 3.30 மணிக்கு ஏசி இயந்திரத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதை கண்ட ஊழியர்கள், வார்டில் உள்ளவர்களை உடனே மீட்டு வேறு இடத்துக்கொண்டு சென்றனர். மேலும், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் நோயாளிகள், பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.