சென்னை : சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீணை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், தீ விபத்து நடைபெற்றுள்ள கட்டிடத்தில் யாரும் சிக்கியுள்ளார்களா என தேடி வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள ராம் நகரில் பழைய பொருட்கள் வைக்கும் சேமிப்பு கிடங்கில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கடும் புகை பரவி வருகிறது. ராம் நகர் குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட அந்த இடத்தில் பழைய பொருட்களை சேமித்து வைத்துள்ள தனியார் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தால் ராம் நகர் பகுதி முழுவதும் கடும் புகை பரவி வருகிறது. தொடக்கத்தில் குடோனுக்குள் மட்டும் பற்றிய தீயானது, பின்னர் குடோனை சுற்றி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள், மின் சாதன பொருட்கள், வயர்கள் உள்ளிட்டவை மீது மளமளவென பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், தனியார் கிடங்கானது காலையில் இருந்து பூட்டி வைக்கப்பட்டிருப்பதாகவும், உள்ளே யாரேனும் இருக்கிறார்களா என்ற விவரங்கள் தெரியவரவில்லை என்று கூறி உள்ளனர்.
தீயை கட்டுப்படும் பணியில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு வருகிறார்கள். தீ விபத்து ஏற்பட்டுள்ள குடோனில் தொழிலாளர்கள் யாரேனும் சிக்கி உள்ளார்களா? என மீட்பு குழு தேடி வருகிறது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.