ஹெல்சிங்கி: வாரத்தில் நான்கு நாட்கள்  மட்டுமே, அதுவும் நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்ற புதிய அறிவிப்பை பின்லாந்து பிரதமர் சான்னா மாரின் வெளியிட்டு இருக்கிறார்.

பணியாளர்கள் குடும்பத்துடன்  அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது:

மக்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன். பிடித்தவர்களுடன் நேரத்தை பொழுதுபோக்குவது, ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பது, பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்றவை கலாச்சாரத்தின் ஒரு பகுதி.

இதுதான் இனி எங்களின் வாழ்க்கையில் நாங்கள் மேற்கொள்ள இருக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்று கூறியிருக்கிறார். 34 வயதாகும் சான்னா மாரின், கடந்த மாதம் தான் பின்லாந்தின் பிரதமராக தேர்வானார்.

இப்போது பின்லாந்தில் கொண்டு வரப்படுகின்ற குறைந்த பணி நேரம் என்பது உலகின் பல நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. ஜப்பானில் இதன் மூலம் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதும், அதன் மூலம் உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது.

நியூசிலாந்தில் உள்ள பிரபல நிறுவமான கார்டியன், 2018ம் ஆண்டே வாரத்துக்கு 4 நாட்களே பணி என்ற இந்த முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன் நிறுவனர் ஆண்ட்ரூ பார்னஸ் கூறுகையில், இதன் மூலம் எங்களின் உற்பத்தி அபரிதமாக உயர்ந்திருக்கிறது.

அதிக லாபம் கிடைத்திருக்கிறது. ஊழியர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து, மன உளைச்சல் இல்லாமல் இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.