இந்தியா முழுதும் கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்படுகையில், சில கிராமங்களில் இப்பண்டிகையை கொண்டாடுவதில்லை என்பதும் மீறி கொண்டாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்பதும் ஆச்சரியம்தானே.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்தது மாம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, சத்திரப்பட்டி, எம்.வலையப்பட்டி, கிளுகிளுப்பைப் பட்டி, திருப்பதிபட்டி, கச்சப்பட்டி, தோப்புப்பட்டி, இந்திராநகர், கலிங்குபட்டி என 11 கிராமங்கள்தான் தீபாவளியை புறக்கணிக்கின்றன.
ஏன்?
இந்த கிராம மக்களுக்கு வாழ்வாதாரம் விவசாயும், கால்நடைகளும்தான். விவசாயம் துவங்கும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தீபாவளி பண்டிகை வருகிறது.
இந்த நேரத்தில் மக்கள் பலரிடம் பண்டிகை கொண்டாட பணம் இருப்பதில்லை. ஆகவே சிலர் கொண்டாட, சிலர் கொண்டாட முடியாமல் போக.. மக்களிடையே ஏற்றத்தாழ்வு, மனவருத்தம் உருவானது.
சிலர் கடன் வாங்கி கொண்டாடிவிட்டு பிறகு வருடம் முழுதும் வட்டி கட்டி திண்டாடும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மாம்பட்டியின் அம்பலக்காரராக இருந்த சேவுகன் அம்பலம் மக்களோடு கலந்தாலோசித்தார். முடிவில் சுற்றியிருக்கும் 11 கிராம மக்களும் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.
இது நடந்தது 1959ம் வருடம்.
அப்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை இன்றுவரை கடைபிடிக்கிறார்கள் இந்த பகுதி மக்கள்.
மேலும், “ பணம் மட்டுமல்ல காரணம். பொங்கல்தான் நம் பண்டிகை. தவிர அந்த நேரத்தில் விவசாயம் முடிந்து அனைவர் கையிலும் பணம் இருக்கும். ஆகவே பொங்கல் பண்டியைகை கோலாகலமாக கொண்டாடுவோம்” என்கிறார்கள்.
இந்த பகுதி மக்களின் இன்னொரு சிறப்பு.. மரம், செடி, கொடிகளை காக்க வேண்டும் என்பதற்காக வெள்ளாடு வளர்ப்பதை தவிர்த்துவிடுகிறார்கள்.
இதே போல திருவாரூர் பகுதியிலும் பல கிராமங்களில் தீபாவளி கொண்டாடுவதில்லை.
ரிஷியூர், பச்சக்குளம், பண்டாரஓடை, நன்மங்கலம், வரதராஜபெருமாள் கட்டளை, பனங்களத்தூர் ஆகிய கிராமங்கள்தான் தீபாவளி கொண்டாடாத கிராமங்கள்.
“ 1955ம் ஆண்டுக்கு முன் தற்போது வரை இந்தப் பகுதியில் குறுவை சாகுபடி கிடையாது. ஒருபோக சாகுபடி மட்டும்தான். ஆகவே விவசாயிகள் வருமானமின்றி சிரமப்பட்டு வந்தனர்.
சிலர் வட்டிக்கு கடன் வாங்கி தீபாவளி கொண்டாடிவிட்டு பிறகு படாதபாடுபட்டனர். ஆகவேதான் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று தீர்மானித்தோம்” என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
இங்கும் 1955 முதல் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.
ஊர்க்கட்டுப்பாட்டை மீறி யாரேனும் தீபாவளி கொண்டாடினால் அபராதமும் உண்டாம்.
மேலும், “பொங்கல்தான் தமிழர் திருநாள். ஆகவே அதைத்தான் கொண்டாடுவோம்” என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.