சென்னை: 
மிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது.
சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை (நிதிநிலை) தாக்கல் செய்வதற்கு முன்பாக, மாநிலத்தில் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் வெளியிடுவது முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது.   இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) காலை 11.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை  வெளியிடுகிறார். 120 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கையாக அது இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் அளவு உயர்வு, ஜி.டி.பி.யின் நிலை, பெறப்பட்ட வருவாயின் அளவு, திட்டங்களுக்காகச் செலவிடப்பட்ட தொகை, கூடுதலாக ஆன செலவு எனப் பல விவரங்களைக் கொண்டதாக இந்த வெள்ளை அறிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக கொரோனா தொற்று பரவல் தொடர்பாகத் தமிழகத்தில் அதிக நிதியைக் கடந்த அண்ணா தி.மு.க. அரசு செலவழித்தது. அந்த செலவு விவரங்களும் தி.மு.க. அரசின் வெள்ளை அறிக்கையில் இடம் பெறும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் அரசியலுடன் ஒட்டி உறவாடி வரும் வெள்ளை அறிக்கை வரலாற்றைப் பார்த்தால், 1977ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை 9 வெள்ளை அறிக்கைகள், தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைக்கு வெளியே வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.