டில்லி

ருப்பு பண விவகாரம் விசாரணையில் உள்ளதால் தற்போது விவரங்களை அறிவிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள கருப்புப் பணம் குறித்த எந்த ஒரு விவரமும் அரசிடம் இல்லாமல் இருந்தது.   கடந்த 2011 ஆம் வருடம் இந்தியாவில் உள்ள கருப்புப் பணம் குறித்து ஆராய அப்போதைய அரசு மூன்று ஆய்வு அமைப்புகள் மூலம் ஆய்வு நடத்தி விசாரணை செய்து விவரங்களை அறிக்க உத்தரவிட்டது.

அந்த மூன்று அமைப்புக்களும்  விவரங்களை 2013 முதல் 2014 வரை தனித்தனியாக வழங்கின.   அந்த விவரங்கள்  பாராளுமன்ற நிலைக்குழுவிடம் விசாரணைக்கு அளிக்கப்பட்டுள்ளன.   விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது

கடந்த 2005 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில் இந்தியாவில் சுமார் 77000 கோடி டாலர் அளவுக்கு கருப்புப் பணம் நுழைந்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்தது.   அந்நிறுவனம் அதே காலகட்டத்தில் 16500 கோடி டாலர் அளவுக்கு கருப்புப் பணம் பிடிபட்டதாகவும் கூறி உள்ளது.

இந்த தகவல்களை ஒட்டி மூன்று அறிக்கைகளிலும் உள்ள விவரங்கள் குறித்து அறிவிக்கக் கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனுக்கள் அளிக்கப்பட்டன.  அந்த மனுவுக்கு பதில் அளித்த நிதி அமைச்சகம்  பாராளுமன்ற குழுவின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் விவரங்களை அளிக்க இயலாது என தெரிவித்துள்ளது.