புதுடெல்லி :
₹ 2 கோடிக்கு குறைவான வீடு, வாகனம், கல்வி உள்ளிட்ட பல்வேறு கடன்களை பெற்று தவணை செலுத்திவரும் அனைவருக்கும், கடன்களுக்கான வட்டி தள்ளுபடியை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் வட்டிக்கு வட்டி போட்டு வாடிக்கையாளர்களின் கழுத்தை வங்கிகள் நெருக்குவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து நீதிமன்ற தலையீட்டின் அடிப்படையில் நிதி அமைச்சகம் இந்த அறிவிப்பை நேற்றிரவு வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி முடிய 6 மாத காலத்திற்கு கடன் தவணை செலுத்தவதில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்தது.
இருப்பினும், தவணையை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கூட்டு வட்டி முறையில் வட்டிக்கு வட்டி போட்டு கட்ட வேண்டும் என்று வங்கிகள் நிர்பந்தித்து வந்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்ட நிலையில், அக்டோபர் 14-ம் தேதி இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள், தீபாவளி நெருங்கும் நேரத்தில் சாமானியர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டிய கடமை அரசின் கைகளில் உள்ளது என்று கூறியிருந்தது.
வட்டிக்கு வட்டி போடும் நடவடிக்கையை கைவிட தேவையான நடவடிக்கையை எடுப்பதாக நீதிமன்றத்தில் அப்போது கூறிய அரசு, தற்போது அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 29 வரை கடன் தவணைகளை முறையாக செலுத்தியவர்களுக்கும், மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலத்தில் தண்டத்துடன் தவணை செலுத்தியவர்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும் என்று அந்த வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.
இரு தினங்களுக்கு முன், வாக்களித்தால் இலவச தடுப்பூசி என்று மக்களுக்கான சுகாதார திட்டத்தை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது தனது அமைச்சகத்தின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது மக்களுக்கு ஆறுதலாக உள்ளது. மேலும், இந்த அறிவிப்பால் அரசுக்கு ₹. 6500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் கூறினர்.