டில்லி:

சில மாநிலங்களில் ரொக்க பற்றாகுறை காரணமாக ஏ.டி.எம்.கள் காலியாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள், ரிசர்வ் வங்கி, வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது.

இது குறித்து நிதியமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநிலங்களில் ரொக்க பற்றாகுறை எதுவும் இல்லை. பீகார், மணிப்பூரில் மட்டும் சில பிரச்னைகள் உள்ளது. ஏடிஎம்.களில் போதுமான பணம் இருப்பு வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் பண பற்றாகுறை நிலவுகிறது. தவறான நிர்வாகம், ஏடிஎம்.கள் மாற்றி அமைத்தல் போன்ற காரணங்களும் உள்ளது’’ என்றார்.

ஆர்பிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ராபி அறுவடை காலத்தில் பரிமாற்றம் அதிகளவில் இருக்கும். எப்போதும் இதுபோன்ற தற்காலிக பொருந்தாமை இருப்பது வழக்கம். ரொக்க தரப்பில் இருந்து பற்றாகுறை என்ற தகவல் வரும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும். பணமதிப்பிழப்புக்கு முன்பு இருந்ததை விட அதிகளவில் பணப்புழக்கம் தற்போது உள்ளது. அதனால் ரொக்க பற்றாகுறை என்பது தவறான தகவல்’’ என்றார்.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் வங்கிகளில் இருந்து பணம் எடுப்பது மிக குறைவாக இருந்துள்ளது. பண பற்றாகுறை காரணமாக பல ஏ.டி.எம்.கள் காலியாக உள்ளது. பணம் இருக்கம் ஏடிஎம்.களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.