டில்லி:
டில்லியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முரளி விஜய் (155) மற்றும் விராட் கோலியின் சதத்தால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. விராட் கோலி 156 ரன்களுடனும், ரோகித் சர்மா 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். விராட் கோலி தனத 6-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இன்று டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருந்தது. இதனால் இலங்கை வீரர்கள் பாதிக்கப்பட்டனர்.
விராட் கோலி இரட்டை சதம் அடித்த பின்னர் காற்று மாசு காரணமாக ஆட்டம் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஆட்டம் தொடங்கியதும் விராட் கோலி 243 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் விராட் கோலி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அப்போது இந்தியா முதல் இன்னிங்சில் 127.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது, மொகமது ஷமி முதல் ஓவரை வீசினார். தில்ருவான் பெரேரா, கருணரத்னே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இன்றைய ஆட்ட முடிவில் இலங்கை 44.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் சேர்த்ததுள்ளது. மேத்யூஸ் 57 ரன்னுடனும், சண்டிமல் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இலங்கை அணி 405 ரன்கள் பின்தங்கியுள்ளது.