டெல்லி: 2025ம் ஆண்டு ஆடவருக்கான செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பான FIDE அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு செஸ் உலகக் கோப்பையை இந்தியா நடத்தும். இன்று அதை அறிவித்த உலக விளையாட்டு அமைப்பான FIDE, இந்த போட்டிகள் அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை திட்டமிடப்பட்டுள்ளதாகவும், போட்டியை நடத்தும் நகரம் குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
தற்போது ஜார்ஜியாவில்மகளிர் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில், இந்தியாவை சேர்ந்த வைஷாலி, திவ்யா, ஹரிகா, ஹம்பி உள்பட 46 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் ஆடவருக்கான 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்தத் தொடரானது, அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் எனவும் மொத்தம் 206 வீரர்கள் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 நாக் அவுட் ரவுண்டுகளும் நடைபெற உள்ளது. போட்டிகள் 90 நிமிடங்களும், ஒரு மூவ் 30 வினாடிகளுக்குள்ளும் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சுற்றும் மூன்று நாட்கள் நீடிக்கும். முதல் இரண்டு நாட்களில் இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்கள், அதைத் தொடர்ந்து தேவைப்பட்டால், மூன்றாவது நாளில் டை-பிரேக்குகள்.
முதல் சுற்றில், முதல் 50 வீரர்கள் பைகளைப் பெறுகிறார்கள், அதே நேரத்தில் 51 முதல் 206 வரையிலான தரவரிசையில் உள்ள வீரர்கள் போட்டியிடுகிறார்கள், மேல் பாதி மற்றும் தலைகீழ் கீழ் பாதி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜோடிகளாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு இந்தியா 2002ம் ஆண்டு ஹைதராபாத்தில் செஸ் உலகக் கோப்பையை நடத்தியது, அதில் விஸ்வநாதன் ஆனந்த் உல செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். நடப்பு உலக சாம்பியனான குகேஷ், 2023 உலகக் கோப்பையின் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தா, தற்போது உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள அர்ஜுன் எரிகைசி ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வை நடத்தும் நகரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்திய செஸ் வீரர்கள் அடுத்தடுத்து சாதித்து வரும் நிலையில் செஸ் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பது செஸ் விளையாடுவோர் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.