சென்னை,

மிழகத்தில் பரவி வந்த காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல்கள் பெரும்பாலான மாவட்டங்களில் பரவி வந்தது. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. மேலும் ஊடகங்களிலும் இதுகுறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

அதையடுத்து, மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் நிலவேம்பு கசாயம் விநியோகிப்பட்டு வந்தது. மேலும் தமிழக சுகாதாரத்துறையும் கிராமம் தோறும் மருத்துவ பரிசோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காய்ச்சல் அதிகமுள்ள சேலம், நாமக்கல், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும்,.தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு  என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மேலும் 12 மாவட்டங்களில் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, காய்ச்சல் இல்லாத நிலையை ஏற்படுத்த சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.