சென்னை; புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், பாதிக்கப்டும் மக்கள் உணவருந்தும் வகையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
வங்கக்கடலில் உருவெடுத்து இருக்கும் ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து மேற்கு வடமேற்கு திசையில் 140கி.மீ தொலைவில் நிலை கொண்டு வருகிறது. மேலும், இது 12கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று மாலை பொழுதில் அல்லது இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக நேற்று முதலே சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகள் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், அதை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் இன்று காலை எழிலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து சில மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் மழை நிலவரம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தவர், அங்கு நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்தார். மேலும், மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்திற்கு நேரில் சென்று மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதையடுத்து,பூக்கடை பேருந்து நிலையம் அருகிலுள்ள கழிவுநீர்உந்து நிலையத்திற்கு நேரில் சென்று, மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து, இராயபுரம், சூரியநாராயணன் தெருவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உணவுக்கூடத்திற்கு நேரில் சென்று, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அங்கு வழங்கப்படும் உணவினை உண்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, இன்று முழுவதும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டார்.