கோவை: பள்ளிகளில் பாலியல் தொடர்பான புகார்களைளை தெரிவிக்க பெண் ஆசிரியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக பல ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், rமீபத்தில் கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கோவை சென்று பள்ளிகளில் ஆய்வு செய்து வரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், காளப்பட்டி பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தை அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணைக்காகச் சென்றபோது, பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதில் அளித்துள்ளது என்றும், அதன்பின்னரே, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளபட்டது என்று கூறினார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியவர், பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பாக மாணவர்களுக்கு அதிகப்படியான விழிப்புணர்வு இல்லை. விழிப்புணர்வுகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தப்படும் என்றார்.
மேலும், பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்க, ஒரு பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மைக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று கூறியவர், அதற்கான அறிவிப்புகள் பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிடப்பட்டு, முறையாக மாணவர்களுக்கு புகார் தெரிவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.