சென்னை: ஆட்சியாளர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், வருமான வரித்துறை மூலம் திமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி, திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 20 வாகனங்களில் வந்த வருமான வரித்துறையினர் இந்த சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மு.க. ஸ்டாலின் தங்கியிருந்த எ.வ. வேலுவுக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுகவை தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றனர், ஆட்சியாளர்கள் தோல்வி பயத்தால், பாஜகவை தூண்டி விட்டு வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றனர், இது போன்ற செயல்கள் அதிமுகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. ஐ.டி. ரெய்டு நடத்தினால் பயந்து போய் விடுவார்கள் என மத்திய அரசு நினைக்கிறது என்று குற்றம் சாட்டினர்.