சாத்தான்குளம்:
காவல்நிலையமே சேர்ந்து தாக்கியதால் தந்தை – மகன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் காவல்துயையைச் சேர்ந்த 13பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பொதுமக்கள், அரசியல் கட்சியின் ஆங்காங்கே சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றன்ர. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில், இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட சாத்தான்குளம் ஆய்வாளர் 2 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டு உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த 19ம் தேதி இரவு 7.30 மணியளவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் நிலையில் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக்கேட்ட பென்னிக்ஸ்க்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸை அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது ஏட்டு முருகன், போலீசார் முத்துக்குமார் ஆகியோரை அவதூறாக பேசியதாக எஸ்ஐ ரகு கணேஷ் வழக்குப் பதிந்து கைது செய்தார். பின்னர் அவரை, கோவில்பட்டி சிறையில் போலீசார் அடைத்தனர்.
சிறையில், பென்னிக்ஸை சந்தித்த அவரது நண்பர்களிடம் போலீசார் தாக்கியதில் தனது ஆசன வாயில் இருந்து இரத்தம் வந்து கொண்டே உள்ளது என பென்னிக்ஸ் கூறியதாக சொல்லப்படு கிறது. இந்நிலையில் சிறையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, சிறைக் காவலர்கள் அவரை பின்னால் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதனிடையே அதிகாலை அவரது தந்தை ஜெயராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வணிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் போலீசைக் கண்டித்து வழக்கறிஞர் மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சம்பவம் அந்தபகுதியில் காட்டுத்தீயாக பரவியது.
இதையடுத்து, காவல்துறையினரை கண்டித்து, சாத்தான்குளம், பேய்க்குளம், நாசரேத்தின் சில பகுதியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடந்து வருகிறது.
இதுபோல் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தந்தை, மகன் உடல் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும், தந்தை மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவைச் சேர்ந்த 4பேர் உட்பட 13பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும், உயிரிழந்த இருவருக்கும் தலா ரூ.50லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருவர் மரணத்திற்கும் சாத்தான்குளம் போலீசார் தான் காரணம் என்றும், இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சாத்தான்குளம் எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய இருவரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் உததரவிட்டுள்ளார்.