டெல்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயமாகிறது.

பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட  2 மடங்கு செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் முறைக்கு மாறும் அவகாசம் இன்று நள்ளிரவுடன் முடிகிறது. இனியும் கால அவகாசம் அளிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

முன்னதாக ஜனவரி 1ம் தேதி முதல் வாகனங்களில் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

சுங்கச் சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி, பாஸ்டேக் வில்லை வாயிலாக கட்டணத்தை கழித்துக் கொள்ளும். இந்த வசதியால் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இல்லை.

அனைத்து சுங்கச் சாவடிகளிலும், இணையவழியிலும், வங்கிகள் வாயிலாகவும் பாஸ்டேக் வில்லையை பெற்றுக் கொள்ள முடியும்.