டில்லி

விவசாயிகள் உதவித் தொகை அவர்களை அவமானப்படுத்தும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அப்ப்போது அவர் விவசாயப் பிரச்னை, விவசாயி உதவித் தொகை, நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ராகுல் காந்தி, ”விவசாயிகளுக்கு நிதிநிலையில் அளிக்கப்பட்டுள்ள உதவித் தொகை என்பது தினம் ரூ.17 ஆகும். இது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். இதனால் அவர்களுக்கு எவ்வித பயனும் இருக்காது. இந்த நிதிநிலை அறிக்கை மூலம் பிரதமர் அளித்துள்ள நிவாரணத்தை விட காங்கிரஸ் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்.

கடன் தள்ளுபடி என்பது தவறான நடவடிக்கை அல்ல. பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்கள் 20-25 பேருக்கு ரூ.3.5 லட்சம் கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் ஒரு சிலர் அதையும் விவசாயிகள் கடனையும் ஒப்பிட்டு பேசுவதுதான் தவறானது. அனில் அம்பானியின் கடனை தள்ளுபடி செய்தால் விவசாயிக்கு என்ன நன்மை கிடைக்கும்?

விரைவில் இந்தியா இரண்டாம் பசுமைப் புரட்சியை நிகழ்த்த உள்ளது. ஆனால் இதில் பயிர் செய்வது மட்டுமின்றி பயிர்கள் பாதுகாப்புக் கூடங்கள் அமைப்பதும் இணையும். அது மட்டுமின்றி பண்ணைகளை இணைத்தல், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் உள்ளிட்டவைகளும் இதில் இடம்பெறும்.

விவசாயக் காப்பிட்டு திட்டம் விவசாயிகளுக்கு பலன் அளிக்கவில்லை அனில் அம்பானி போன்ற காப்பீட்டு நிறுவன உரிமையாளர்கள் மட்டுமே பலன் அடைகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளையும் மீறி விவசாயம் இன்னும் வாழ்ந்துக் கொண்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.