லவுட், பஞ்சாப்

ஞ்சாப் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருண் நரங் விவசாயிகளால் ஆடை கிழிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளான் சட்டங்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   டில்லியில் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்துகின்றனர்.  பல கட்ட  பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் மத்திய அரசின் பிடிவாதத்தால் போராட்டம் முடியவில்லை.

இதனால் பஞ்சாப் மாநில விவசாயிகள் பாஜகவினர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.  பஞ்சாப் மாநிலத்தின் அபோகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான அருண் நரங் என்பவர் மலவுட் பகுதியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள அந்த பகுதி கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தார்.    அவர் அங்கிருந்து கிளம்பும் போது அங்குத் திரண்ட விவசாயிகள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு நிலைமை மோசமாகி வந்ததால் காவல்துறையினர் அருண் நரங்கை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.  அப்போது அவர்களை மீறி விவசாயிகள் சட்டமன்ற உறுப்பினரை சூழ்ந்து கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.    இந்த தாக்குதலின் போது அவருடைய ஆடைகள் கிழிக்கப்பட்டன.  பாஜக அலுவலகமும் சூறையாடப்பட்டது.

அவரை மீட்டு அருகிலிருந்த கடைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.  அவர் மீது மீண்டும் கருப்பு மையை வீசி தாக்குதல் நடத்தினர்.  அங்கிருந்த காவல்துறையினர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது.  அவரை கடைக்குள் பாதுகாப்பாக வைத்த காவல்துறையினர் கடையைப் பூட்டி அவரைக் காப்பாற்றி உள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய விவசாயிகளுக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்த தாக்குதலைப் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கண்டித்துள்ளார்.  பஞ்சாப் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் யாராக இருப்பினும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலர் தருண்சுக் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசாங்கத்தை மிகவும் தவறாகப் பேசி உள்ளார்.   மேலும் இந்த தாக்குதல் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கின் முழுமையான சரிவை அம்பலப்படுத்தி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.