சென்னை: பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை மட்டுமே வழங்குவதாக தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், கரும்பு வழங்க கோரி மதுரை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு திமுக அரசு பதவி ஏற்றதும், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, கரும்பும் வழங்கப்பட்டது. ஆனால், அரசு வழங்கிய பொங்கல் பொருட்கள் தரமற்றவை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை உடன் ரொக்கம் ரூ.1000 மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்றும், பொங்கல் பரிசு பொருட்கள் அந்தந்த மாவட்டங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என விவசாயிகளும், வணிகர்களும் தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், தமிழகஅரசு, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவித்தது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து மதுரை அருகே மேலூர் பகுதியில், மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கூறிய விவசாயிகள், கடந்த ஆண்டை போலவே குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவது குறித்து அரசு அறிவிக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். கரும்புடன் ஏராளமான விவசாயிகள் திடீர் போராட்டத்தால் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போக்குவரத்து செயல்பட நடவடிக்கை எடுத்தனர்.