டெல்லி: மத்தியஅரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் 12ந்தேதி டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை உள்பட நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். பாஜக தலைவர்களை கெரோ செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 14வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய விசாயிகள், மத்தியஅரசின் யோசனையை நிராகரித்து விட்டதாக அறிவித்து உள்ளது. அதையடுத்து, நாடு முழுவதும் வரும் 14ந்தேதி மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் அரியாணா, பஞ்சாப் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் காரணமாக டெல்லி ஸ்தம்பித்து உள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் பரவ த்தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக விவசாய சங்கத்தலைவர்களுக்கும், மத்தியஅரசுக்கும் நடைபெற்ற 6 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்று மாலை உள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெற முடியாது என்று கூறிய மத்தியஅரசு சில திருத்தங்கள் செய்ய தயராராக இருப்பதாக தெரிவித்து. அதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மத்திய அரசின் யோசனைகள் அடங்கிய குறிப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.
20 பக்கங்கள் அடங்கிய அந்த குறிப்புரையில் விவசாயிகள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களை களையும் வகையில் விளக்கம் தரப்பட்டு இறுதியாக எந்தெந்த திருத்தங்களுக்கு அரசு தயாராக உள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அதில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்திய விவசாயிகள் சங்க தலைவர்கள், அரசின் திட்டத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஸ்வராஜ் கட்சி தலைவர் யோகேந்திர யாதவ், சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக அரசு சில முன்மொழியை வழங்கியது. ஆனால், அதை விவசாயிகள் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்.
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் காணப்படாத நிலையில், அவர்கள் தடையை மீறி டெல்லிக்குள் நுழைந்து போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. டெல்லி உத்தர பிரதேசத்தை இணைக்கு் காஸிபூர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு வருவதாகவும், டிசம்பர் 12ந்தேதிஅன்று டெல்லி ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெறும், நாடு முழுவதும் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களும் முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, டிசம்பர் 14ந்தேதி அன்று நாடு முழுவதும அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்றும், பாஜக தலைவர்கள் கெரோ செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, விவசாயிகள் போராட்டங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கை தொடர்பாக டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவற்றின் தலைவர்கள் புதன்கிழமை மாலையில் சந்தித்துப் பேசி வருகின்றனர்.