விவசாயிகள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கும் நிலையில் அவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அமைச்சர்களுடனான இன்றைய சந்திப்பின் போது முக்கிய முடிவு எட்டப்படும் என்றும் இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், பஞ்சாப் மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் விவசாயிகளின் டெல்லி நோக்கிய பேரணியை தடுத்து அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு, ரப்பர் புல்லட் ஆகியவை மூலம் போலீசார் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்து பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பதிண்டா-பர்னாலா, லூதியானா-ஜக்கல்-டெல்லி, ராஜ்புரா-டெல்லி மற்றும் அமிர்தசரஸ் ஃபதேகர் சாஹிப் ஆகிய வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.