டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 44வது நாளாக தொடர்கிறது. ஆனால், மோடி அரசு, பேச்சு வார்த்தை என்ற பெயரில்,  விவசாயிகளை, கடூங்குளிர் மற்றும் கொட்டும் மழையிலும் நனைய வைத்து வேடிக்கை பார்க்கிறது. இது நாடு முழுவதும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் விரோத பாஜக மத்திய அரசு கொண்டு வந்துள்ள  3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வட மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக  பஞ்சாப், அரியானா உள்பட சில  மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், விவசாயிகள் மற்றும்  மத்தியஅரசு இடையே 8 கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று முடிந்ததுள்ளது. ஆனால், இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத சூழல் நிலவி வருகிறது.

முன்னதாக, 8வது கட்ட பேச்சுவார்த்தையில்  தீர்வு ஏற்படாவிட்டால், 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பை பிரமாண்டமாக நடத்தப் போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருந்தாலும் நேற்று நடைபெற்ற பேச்சு வார்தை தோல்வியையே சந்தித்தது.

அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை வரும் 15ந்தேதி நடைபெறலாம் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், இது தொடர்பான வழக்கு வரும் 11ந்தேதி (திங்கட் கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அதன்பிறகே, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மத்தியஅரசு முடிவு செய்யும் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்ற நிலையில் உறுதியாக உள்ள மோடி அரசு, பேச்சு வார்த்தை என்ற பெயரில் வேளாண் அமைப்புகளை அலைகழித்து வருவதாகவும், விவசாயிகளை கடும் குளிரிலும், மழையும் நனைய வைத்துவேடிக்கைப் பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுவரை போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளில் 60க்கும் மேற்பட்டோர் மரணத்தை தழுவிய நிலையிலும், மோடி அரசு பிடிவாதமாக இருந்து வருவது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.