டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 53வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், 10ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 19ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது 53வது நாளை எட்டி உள்ளது. இதற்கிடையில், வேளாண் சட்டங்களை அமல்படுத்த, உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்து, இந்த சட்டம் குறித்து ஆராய, 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் இருந்து ஒருவர் விலகி உள்ள நிலையில், குழுவினரை ஏற்க விவசாயிகள் மறுத்து விட்டனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில், மத்திய அரசு மேற்கொண்ட எந்தவொரு முயற்சியும் பலனலிக்கவில்லை. இதுவரை நடத்தப்பட்டுள்ள 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. அரசும், விவசாயிகளும் தங்களது முடிவில் உறுதியாக இருப்பதால், பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே தங்களின் கோரிக்கைகள் என்றும், வேறு எந்த சலுகைகளையும் பெற நாங்கள் தயாராக இல்லை, தங்களின் கோரிக்கையை ஏற்காவிடில் ஒரு வருடம் வரையில் கூட போராட்டத்தை தொடர தயார் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை வரும் 19-ம் தேதி 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்தியஅரசு விவசாயிகளின் போராட்டத்தை இழுத்தடித்து வருகிறது என விவசாயிகள் குற்றம் சுமத்தி உள்ளனர்.