கர்நாடகத்தில் தங்கம், வைர நகைகளை போல சமீப நாட்களாக வெங்காய கொள்ளை நடைபெறுவதால், பாதுகாப்பு பணிக்காக காவலர்களை அம்மாநில விவசாயிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில் வெங்காயத்தின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடிப்பது போல வெங்காயங்களையும் சிலர் கொள்ளையடித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் சமீபநாட்களாக வெங்காயம் கடத்தல், வெங்காயம் திருட்டு செய்திகள் அதிகமாக வெளியாகி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பான இடங்களில் வெங்காயங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கதக் மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தங்களது பயிரை 24 மணி நேரமும் கண்காணிக்க பாதுகாவலர்களை ஏற்பாடு செய்துள்ளனர். கையில் உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வெங்காயத்தை பாதுகாவலர்கள் பாதுகாத்து வருகின்றனர். வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால், தங்களது நிலத்தில் பயிரிட்டுள்ள வெங்காயத்தை திருடர்கள் திருடி விடுவார்களோ என்ற பயத்தில் பகலிலும், இரவிலும் வெங்காய பயிர் நிலத்தில் பாதுகாவலர்கள் சுற்றி வருகின்றனர்.