புதுடெல்லி:
விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் மூன்றுவேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணாவை சேர்ந்த விவசாயிகள் கடந்த 135 நாள்களாக டெல்லி எல்லைகளில் பல்வேறுபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் 11 முறை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதே கோரிக்கையாக வைக்கப்படுவதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டம் குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவிக்கையில், பல விவசாயிகள் சங்கத்தினர், பொருளாதார வல்லுநர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சில விவசாயிகள் மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இதுவரை 11 கட்டப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும்,அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.