டெல்லி: மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தி டெல்லிக்குள் நுழைவோம் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து உள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் டிராக்டர்கள் டெல்லியை நோக்கி அணிவகுத்து செல்கின்றன. இதனால், டெல்லியில் பரபரப்பு நிலவி வருகிறது.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியாணா, பஞ்சாப் மாநிலங் களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ‘டெல்லி சலோ’ பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன.
ஏற்கனவே கடந்த முறை நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தால், பொதுமக்கள் மட்டுமின்றி, அரசுத்துறை உள்பட அத்தனை பணிகளும் முடங்கிய நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த காலக்கட்டத்தில் மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்த வருவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது, டெல்லி உள்பட அண்டை மாநிலங்களிலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, டெல்லியில் பலத்த பாதுகாப்புடன் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், டெல்லிக்குள் நுழையும் அனைத்து வழிகளும் தடுப்புகளைக் கொண்டு அடைக்கப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக போராட்டம் அறிவித்துள்ள விவசாய சங்க பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்துப் பேசியது. மத்திய உணவு அமைச்சர் பியூஸ்கோயல் தலைமையில் கடந்த வாரம் (பிப்ரவரி 8ந்தேதி) நடைபெற்ற இந்த பேச்சு வார்ர்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. 7மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சமூக முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று (பிப்ரவரி 12ந்தேதி) இதையடுத்து நேற்று மாலை மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் இரு தரப்புக்கும் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் இன்று திட்டமிட்டபடி டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் டிராக்டர்களிலும், நடைபயணமாகவும் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளனர். அதுபோல பஞ்சாபில் இருந்தும் விவசாயிகள் டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். இரு மாநில விவசாயிகளும் பல்வேறு முனைகளில் டெல்லிக்குள் செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதையடுத்து டெல்லி போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். டெல்லியின் ஹரியாணா எல்லைகளில் தடுப்புகள் மற்றும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் டெல்லியில் ஒரு மாதத்திற்கு தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநில போலீஸார் செய்து வருகிறார்கள். டெல்லிக்குச் செல்லும் மாநில எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடகிழக்கு டெல்லி பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 144-வது பிரிவின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் பேரணி எதிரொலியாக மார்ச் 12-ம் தேதி வரை டெல்லியில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மாநாடு நடைபெற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.