சென்னை: தென் மாவட்டங்களில் விவசாயிகளின் 100 ஆண்டு கனவு திட்டம் மற்றும் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டமுமான தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று காலை முதல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக மிக கனமழை பெய்து வருகிறது. 4 மாவட்டங்களிலுள்ள ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதோடு, அணைகளும் வேக வேகமாக நிரம்பி வருகின்றன. அடுத்த 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அறிவித்தபடி, தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ள நீரில், கன்னடியன் அணைக்கட்டில் இருந்து 2,765 மில்லியன் கன அடி நீரை கருமேனியாறு, நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை 4 நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு கலைஞரால் 21.02.2009 இத்திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டியதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன என்றும், தற்போது, முதல் மூன்று நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு நான்காவது நிலைப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 67.1 கி.மீ நீளத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கி.மீ நீளத்திற்கும் என மொத்தம் 75.2 கி.மீ நீளத்திற்கு வெள்ள நீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளனதாகவும், இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் (56933 ஏக்கர்) பாசன உறுதி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன்பெறும் என்றும், திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்களும் பயன்பெறும் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.
தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் எனவும், அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உபரிநீர் திறக்கப்பட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், வேளாண் பெருமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.