சென்னை,
தற்கொலை செய்துகொண்ட திருத்துறைப்பூண்டி விவசாயிக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு, தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் சம்பா சாகுபடிக்கு போதுமான அளவில் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் கருகியதை கண்டு வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்கிற விவசாயி பூச்சிக் கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அதே போல மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறவிடாமல் தடுக்கிற முயற்சியில் மத்திய பா.ஜ.க. அரசு துரோகச் செயல் செய்ததின் விளைவாக தமிழக விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தண்ணீர் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்த நிலையில் தாங்கள் நேரடி விதைப்பு மூலம் செய்த முயற்சிகள் பலனின்றி பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக காவிரி டெல்டா பகுதியில் இத்தகைய விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். அவர்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்து உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் மன உளைச்சல் காரணமாகவே இத்தகைய தற்கொலைகள் நிகழ்கின்றன.
கடந்த மத்திய காங்கிரஸ் அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையான ரூ.74 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது. அதைப் போல விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்துகிற வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.